ஸ்டஃப்டு வெண்டைக்காய் (Stuffed Okra)ஸ்டஃப்டு வெண்டைக்காய் என்றதும் நாம் அனைவருக்கும் தோன்றுவது- இதனை செய்ய நிறைய நேரம் எடுக்கும், இதற்கு நிறைய எண்ணெய் தேவைப்படும், அதே போல சில சமயம் ஸ்டஃப்டு செய்த காய்கள் சீராக வெந்து இருக்காது. அப்படி நீங்கள் நினைத்தால் இதனை பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை மாற்றி கொள்ளதான் வேண்டும்.


நானும் முதன்முறையாக செய்யும் பொழுது இப்படி தான் நினைத்தேன். அதன் பின் என்னுடைய வடமாநில தோழியிடன் இதன் இரகசியத்தினை அறிந்த பின் அதன் வழி ஸ்டஃப்டு வெண்டைக்காய் செய்து வெற்றி பெற்றேன்.


இந்த வெண்டைகாயிற்கு ஸ்டஃபிங் நம்முடைய விருப்பத்திற்கு எற்றாற்போல செய்யலாம். நான் ரசப்பொடி வைத்து செய்தேன். இதனை சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லிமிளகாய் பொடி, கருவேப்பில்லை பொடி என எதை வைத்து செய்தாலும் சுவையோ சுவை தான் போங்க..


இந்த வெண்டைக்காயில் நிறைய எண்ணெய் சேர்க்காமால் செய்வதால் அனைவரும் சாப்பிடலாம்.


இந்த செய்முறையில் வெண்டைக்காயில் எண்ணெய் சேர்க்காமல் அடிக்கடி தண்ணீரை தெளித்து தட்டு போட்டுமூடி குறைந்த தீயில் வேகவிடவேண்டும். இதற்கு அகலமான நாண்-ஸ்டிக் பன்(Non-Stick Pan) உபயோகிப்பது மிகவும் சிறந்தது.


சரி..வாங்க.இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க..


சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடம்
தேவையான பொருட்கள்:
§ வெண்டைக்காய் – 1/2 கிலோ
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
§ கொத்தமல்லி- மேலே தூவ
ஸ்டஃப்பிங் செய்ய தேவையான பொருட்கள் :
§ கடலை மாவு – 2 தே.கரண்டி
§ சாம்பார் பொடி() ரசப்பொடி – 2 தே.கரண்டி
§ எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
§ உப்பு – 1/2 தே.கரண்டி
செய்முறை :
வெண்டைகாயினை கழுவி கொள்ளவும். வெண்டைக்காயின் காம்பினை வெட்டவும். அதன் நடுவில் சிறிதாக கீறிவிடவும்.(இதில் தான் ஸ்டஃப்பிங் வைக்கபோகிறோம்.)


ஸ்டஃப்பிங் பொருட்களை அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.(ஸ்டஃப்பிங் கொழுக்கட்டை பிடிப்பது போல வர வேண்டும் . இல்லையெனில் 1 – 2 தே.கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.)


ஸ்டஃப்பிங்கை வெண்டைக்காயின் நடுவில் அடக்கி வைக்கவும்.

பெரிய நாண்-ஸ்டிக் பனில் ஸ்டஃப்பிங் செய்த வெண்டைக்காயினை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும்.


வெண்டைக்காயின் மீது எண்ணெய் ஊற்றி தட்டு போட்டு மூடி சிறிய தீயில் வேகவிடவும்.
4 - 5 நிமிடம் கழித்து வெண்டைக்காயினை திருப்பிவிட்டு அதன் மீது 2 தே.கரண்டி தண்ணீரினை தெளித்துவிடவும்.

5 நிமிடத்திற்கு ஒரு முறை வெண்டைக்காயினை திருப்பிவிட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். கடைசியில் வெண்டைக்காய் வறுவல் மாதிரி வரும் வரை வைத்து பொடியாக வெட்டி வைத்துள்ள கொத்தமல்லியினை தூவவும்.

சுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.


கவனிக்க :
வெண்டைக்காயில் சரியாக ஸ்டஃபிங் வைக்கவும்.
ஸ்டஃப்டு செய்த வெண்டைக்காயினை பனில் வைக்கும் பொழுது ஸ்டஃபிங் பகுதி மேல் நோக்கி வைக்க வேண்டும்.


மிகவும் குறைந்த தண்ணீர் (அதவாது 1 – 2 தே.கரண்டி தண்ணீர்) தான் ஒவ்வொரு முறையும் தெளிக்க வேண்டும்.

4 comments:

Menaga Sathia said...

இந்த ஸ்டஃப் வெண்டைக்காயை சாம்பார் பொடியில் செய்தேன்பா,ரொம்ப நல்லாயிருந்தது கீதா.

GEETHA ACHAL said...

ஸ்டஃப்டு வெண்டைக்காய் செய்துவிட்டு தங்கள் கருத்தினை தெரிவித்து, மேலும் என்னை ஊக்கவிக்கும் திருமதி.மேனகாவிற்கு மிகவும் நன்றி.

Kanchana Radhakrishnan said...

நான் சாம்பார் பொடி,கடலைமாவு,கொஞ்சம் அரிசி மாவு சேர்ப்பேன்.அதுவும் நன்றாக வரும்.

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா.

இந்த முறையிலும் செய்து பாருங்கள்..நன்றாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...