சுறாமீன் குழம்பு - Sura / Shark Fish Kulambuஇந்த குழம்பினை சளி, காய்ச்சல் , குளிர் காலம் போன்ற சமயங்களுக்கு எற்ற குழம்பு. இதனை குழந்தை பெற்ற பெண்களுக்கு கொடுப்பாங்க. உடலிற்கு மிகவும் நல்லது.
அதிக எண்ணெய் சேர்க்காமல் இதனை செய்யலாம். சுறா மீன் குழம்பினை நாம் எப்பொழுதும் வைக்கும் மீன் குழம்பு போல வைத்தால் சுவையாக இருக்காது.
அதே போல, சுறாமீனினை குழம்பில் போடும் பொழுது, தோலினை நீக்கிவிடவேண்டும்.
மீனை வாங்கும் பொழுதே தோலினை நீக்கி வாங்கி கொள்ளலாம், அப்படி இல்லயெனில் மீனை தனியாக வேகவைத்தபின் நாம் தோலினை நீக்கிவிட வேண்டும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· சுறா மீன் – 1/2 கிலோ
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி + 1/2 தே.கரண்டி
· உப்புதேவையான அளவு
· கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது சிறிதளவு
புளி கரைக்க :
· புளி – எலுமிச்சை அளவு
· தண்ணீர் – 3 – 4 கப்
அரைத்து கொள்ள:
· வெங்காயம் – 1 பெரியது
· மிளகு – 2 மேஜை கரண்டி (சுமார் 40 மிளகுகள்)
· பூண்டு – 10 - 12 பல் பெரியது
மேலும் காரம் விரும்பினால் :
· மிளகாய் தூள் + தனியா தூள் – 1 தே.கரண்டி
முதலில் தாளிக்க :
· நல்லெண்ணெய் – 1 தே. கரண்டி
· கடுகு – 1/2 தே.கரண்டி
· வெந்தயம் – 1/4 தே.கரண்டி
· அல்லது வடகம் – சிறிதளவு (கடுகு, வெந்தயதிற்கு பதிலாக)
செய்முறை :
v மீனை சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் + மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.

மீன் நன்றாக வெந்த பிறகு, சிறிது நேரம் ஆறிய வைத்து தோலினை நீக்கிவிடவும்.

v வெங்காயம் + பூண்டு + மிளகு சேர்த்து மிக்ஸில் மைய அரைத்து கொள்ளவும்.

v புளியினை தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
v அரைத்த விழுது + புளி தண்ணீர் + 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். (காரம் பார்த்து கொள்ளவும். விரும்பினால் மேலும் காரத்திற்கு மிளகாய் தூள்,தனியா தூள் சேர்த்து கொள்ளவும்.)

v கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து, கலந்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி நன்றாக 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
v குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன், கொத்தமல்லி + வேகவைத்து தோல் நீக்கி வைத்துள்ள சுறாமீனை குழம்பில் போடவும்.
v இதனை மேலும் 10 – 12 நிமிடங்கள் குழம்பில் போட்டு மிதமான தீயில் கொதிக்கவிடவும். சுவையான சத்தான சுறாமீன் குழம்பு ரெடி.

கவனிக்க :
சுறாமீனை எப்பொழுதும் தோலினை நீக்கி குழம்பில் சேர்க்கவும்.
வேகவைத்த மீனை, குழம்பில் எவ்வளவு நேரம் கொதிக்கவிட்டாலும் உடைந்துவிடாது. ( மற்றமீன்கள் அதிகமாக வெந்தால் கரைந்துவிடும்.) சுறாமீன் நன்றாக இருக்கும்.
இந்த குழம்பினை சிறிது தண்ணியாக வைத்து, ரசம் போல ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

புடலங்காய் புட்டு (Pudalangai Puttu/ Snake Gourd)


புடலங்காயில் அதிக அளவு தண்ணீர் இருக்கின்றது. இந்த காய் உடலில் எற்படும் சூடினை குறைக்கும். உடலிற்கு மிகவும் குளுமை.
இந்த காயினை சாப்பிடுவதால், வயிற்று பூச்சி, வயிற்று புண் போன்றவகைகளினை சீக்கிரத்தில் குணமடைய செய்கின்றது.
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புடலங்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :

· புடலங்காய் – 1/4 கிலோ
· வெங்காயம் – 1
· பூண்டு – 5 பல்
· கருவேப்பில்லை – 5 இலை
· கடுகு – 1/4 தே.கரண்டி
· காய்ந்த மிளகாய் – 2
· உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
· கொத்தமல்லிகடைசியில் சேர்க்க சிறிதளவு
· உப்புதேவையான அளவு
· எண்ணெய் – 1 தே.கரண்டி
செய்முறை :
v புடலங்காயினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம் + பூண்டினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
v புடலங்காயினை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

v ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்த பருப்பு + காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின், பூண்டினை சேர்த்து வதக்கவும்.
v பின் வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
v வெங்காயம் வதங்கியதும், வேகவைத்துள்ள புடலங்காய் + உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
v கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான புடலங்காய் புட்டு ரெடி.

பார்லி முருக்கு - கேழ்வரகு முருக்கு (Barley Muruku & Ragi Muruku)சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - பொரிப்பதற்கு
பார்லி முருக்கு செய்ய :
· பார்லி மாவு – 1 கப்
· உளுத்தம் மாவு – 1 மேஜை கரண்டி
· வெண்ணெய் – 1 தே.கரண்டி( Room Temperature)
· உப்பு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/4 தே.கரண்டிக்கு குறைவாக (அ) ஓமம்
கேழ்வரகு முருக்கு செய்ய :
· கேழ்வரகு மாவு – 1 கப்
· உளுத்தம் மாவு – 1 மேஜை கரண்டி
· வெண்ணெய் – 1 தே.கரண்டி( Room temp.)
· உப்பு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/4 தே.கரண்டிக்கு குறைவாக (அ) ஓமம்
செய்முறை :
v பார்லி முருக்கு செய்ய கொடுத்துள்ள பொருட்களில், பார்லி மாவு + உளுத்தம் மாவு + வெண்ணெய் + சீரகம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
v நன்றாக கலந்து பின், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
v கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.
v முருக்கு அச்சில் மாவினை போட்டு, முருக்குகள் பிழியவும்.
v சுடான எண்ணெயில் , முருக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான பார்லி முருக்கு ரெடி.

கேழ்வரகு முருக்கு :
v கேழ்வரகு முருக்கு செய்ய கொடுத்துள்ள பொருட்களில், கேழ்வரகு மாவு + உளுத்தம் மாவு + வெண்ணெய் + சீரகம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
v நன்றாக கலந்து பின், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
v கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.
v முருக்கு அச்சில் மாவினை போட்டு, முருக்குகள் பிழியவும்.

v சுடான எண்ணெயில் , முருக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான மொருமொருப்பான கேழ்வரகு முருக்கு ரெடி.

கேழ்வரகு இட்லி - Ragi Idly - Indian Ragi Recipe / Idly Varietiesஇது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் ஸ்பாஞ் போல மென்மையாக இருக்கும்.

கேழ்வரகில் அதிக அளவு கல்சியம்(Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது. டயபெட்டிக், வயதனாவர்களுக்கு எற்ற உணவு.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள் (இட்லி மாவு புளித்தபிறகு)
தேவையான பொருட்கள் :
· கேழ்வரகு மாவு – 2 கப்
· உளுத்தம் பருப்பு – 3/4 கப்
· உப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
v உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும்.
v ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
v கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
v கரைத்த வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்து உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.)
v இதனை குறைந்தது 6 – 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். ( இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.)

v புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் ஊற்றவும்.

v இதனை இட்லி வேகவைப்பது போல 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.

v சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.

கவனிக்க :
நாம் எப்பொழுதும் செய்யும் அரிசி இட்லியில், 1:3 அல்லது 1:4 என்ற விகிததில் தான் உளுந்தினை சேர்த்து இட்லி செய்வோம். அதே போல தான் கேழ்வரகு மாவிலும் செய்யவேண்டும்.
மிக்ஸியில் அரைப்பவர்கள் 1:3 என்று சேர்த்து கொள்ளலாம்.

பார்லி தட்டை (Barley Thatai)


எப்பொழுதும் வருடவருடம், தீபாவளியினை எதாவது ஒரு தீம் வைத்து கொண்டாடுவது எங்களுடைய வழக்கம். இந்த வருடம் தீபாவளியினை , நாங்கள் டயட் தீபாவளியாக கொண்டாட இருக்கின்றோம். அதற்காக நான் செய்த பார்லி தட்டை…


பொதுவாக , தட்டை செய்யும் பொழுது கடலைபருப்பினை சேர்த்து செய்வாங்க.. கடலைப்பருப்பினை ஊறவைக்க நேரம் இல்லையெனில், முழு ஒட்ஸினை அப்படியே மாவுடன் சேர்த்து கலந்து தட்டை சுடவும். சுவையாக வித்தியசமாக இருக்கும்.


என்னுடைய பதிவில் வெளிவந்த ஈஸி தட்டையின் செய்முறையினை காண இங்கே க்ளிக் செய்யவும்.


பருப்பினை ஊறவைக்க தேவையான நேரம்: குறைந்தது 1/2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி மாவு – 1/2 கப்
· பொட்டுகடலை மாவு – 1/4 கப்
· அரிசி மாவு – 1/2 கப்
· கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி(ஊறவைக்கவும்)
· வெண்ணெய் – 1 மேஜை கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
· காய்ந்த மிளகாய் – 3
· பெருங்காய தூள் – 1/4 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
· எண்ணெய் – தட்டைகளை பொரித்து எடுக்க
செய்முறை :
v கருவேப்பில்லை + காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
v பார்லி மாவு + பொட்டுகடலை மாவு + அரிசி மாவு + உப்பு, பெருங்காயம் + வெண்ணெய் + பொடித்த கருவேப்பில்லை+ கடலைப்பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

v மாவு நன்றாக கலந்த பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவினை பிசையவும். இப்பொழுது தட்டை செய்ய மாவு ரெடி.
v கடாயில் எண்ணெயினை காயவைக்கவும். சிறிய சிறிய தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய பார்லி தட்டை ரெடி.

கொள்ளு போளி (Kollu Sweet Poli)
போளியா?...யார் இதனை செய்வது…எவ்வளவு நேரம் எடுக்கும்…இதனை செய்ய வேலை அதிகம் எடுக்கும்… என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த போளியினை செய்து பாருங்கள்…அப்புறம் என்ன..அடிக்கடி வீட்டில் போளி தான்..இந்த போளிகளை செய்ய எடுக்கும் நேரம் அரை மணி நேரத்திற்கும் குறைவாக தான் இருக்கும்.
சிலர் போளி மாவினை குறைந்தது 2 -3 மணி நேரமாவது ஊறவைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று எல்லாம் சொல்லுவாங்க…அப்படி எல்லாம் இல்லாமல் என்னுடைய செய்முறைபடி செய்தால், உடனே செய்தாலும் சுவையாக இருக்கும்.
பூரணம் அதிகமாக செய்து ப்ரிஜில் வைத்து கொண்டால், விரும்பிய நேரத்தில் போளிகளை செய்து சாப்பிடலாம்..
அவரவர் விருப்பதிற்கு எற்ப, கடலைபருப்பு, சென்னா, பச்சைபயிறு வைத்து போளிகளை செய்யலாம். இதே போல காரபோளிகளும் செய்து சாப்பிடலாம்.
கொள்ளுவினை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கொள்ளு – 1 கப்
· மைதா மாவு – 1 கப்
· பொடித்த வெல்லம் – 1/4 கப்
· ஏலக்காய் – 2 பொடித்தது
· நெய் – 2 மேஜை கரண்டி
· எண்ணெய் – 2 மேஜை கரண்டி
· உப்பு – 1 சிட்டிகை (மாவு பிசைவதற்கு)
· மஞ்சள் கலர் – சிறிதளவு
செய்முறை :
v கொள்ளுவினை குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். இதனை நன்றாக கழுவி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
v வேகவைத்த கொள்ளுவினை, தண்ணீர் வடியவிட்டு, சிறிது நேரம் ஆறவைத்த பிறகு, அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்றகூடாது).
v ஒரு கடாயில் வெல்லம் போட்டு 2 நிமிடங்கள் வைக்கவும். அதன் பிறகு பொடித்து வைத்துள்ள வேகவைத்த கொள்ளு + ஏலக்காய் பொடி + 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து மேலும் 5 - 6 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும்.(பூரணம் கையினால் பிடித்தால் உருண்டையாக பிடிக்க வரவேண்டும்..இல்லையெனில் மேலும் சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.)
v இப்பொழுது போளியில் வைக்கப்படும் பூரணம் ரெடி.
v மைதா மாவு + உப்பு + மஞ்சள் கலர் + எண்ணெய் சேர்த்து மாவினை முதலில் பிசையவும்.
v பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவினை மிகவும் தளர்வாக மாவினை பிசைந்து கொள்ளவும். இப்பொழுது மாவும் ரெடி.
v பூரணத்தினை,நெய் தடவி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அதே அளவில் மாவினையும் உருட்டி வைக்கவும். மாவினை சிறிது தட்டி அதன் நடுவில் பூரணத்தினை வைக்கவும். பிறகு அதனை நன்றாக மூடிவிடவும்.

v இதனை, நன்றாக உள்ளங்கையினால் வைத்தே போளிகளாக தட்டி கொள்ளலாம்.

v கல்லினை காயவைத்து, போளிகளை நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய போளி ரெடி.

கவனிக்க:
v மாவினை பிசையும் பொழுது, மாவு கண்டிப்பாக தளர்வாக இருக்க வேண்டும். பிசைந்த மாவு, கையினால் வட்டம் வடிவாக இழுக்க வரவேண்டும் இந்த மாவினை சாப்பத்தி மாவு பத்திற்கு இல்லாமல் இன்னும் சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
v அதே போல, மாவு உருண்டையும், பூரணம் உருண்டையும் ஒரே அளவில் இருந்தால் தான், இனிப்பு அனைத்து இடத்திலும் படர்ந்து இருக்கும்.
v முதல் முறை செய்வர்கள், எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துகொண்டும் போளிகள் செய்து பாருங்கள். இப்படி செய்தால் பூரணமும் வெளியில் வராது. போளியும் மிகவும் மெல்லியதாக இருக்கும்.
v வெல்லத்தில் மண் இருக்குமோ என்று சந்தேகம் இருந்தால், முதலில் வெல்லத்தினை கடாயில் வைத்து உருகவைத்து, பிறகு அதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு பொடித்த கொள்ளுவுடன் சேர்த்து பூரணம் செய்து கொள்ளவும்.

பார்லி தயிர் சாதம்(Barley Curd Rice)

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· வேகவைத்த பார்லி – 2 கப்
· தயிர் – 1/2 கப்
· கொத்தமல்லிசிறிதளவு
· உப்புதேவையான அளவு
· திரட்சை, மாதுளை பழம் – சிறிதளவு(விரும்பினால்)
தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
· பச்சைமிளகாய் – 2
· இஞ்சி – சிறிய துண்டு
· பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
v கருவேப்பில்லை + பச்சைமிளகாய் + இஞ்சி + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v ஒரு பாத்திரத்தில், வேகவைத்த பார்லி + தயிர் + தாளித்த பொருட்கள் + உப்பு + கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
v பரிமாறும் பொழுது, மாதுளை+ திரட்சை பழங்கள் சேர்த்து கொடுக்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய பார்லி தயிர் சாதம் ரெடி.

குறிப்பு :
தாளிக்கும் பொழுது, 2 மோர் மிளகாய் சேர்த்து தாளித்து சாதத்தினை கலந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
இதே போல, ஒட்ஸிலும் செய்யலாம்.

பார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை(Barley Oats Pal Kozhukattai)


பால் கொழுக்கட்டையினை அரிசி மாவில் செய்வாங்க…ஒரு ஹெல்தியான உணவாக இதனை பார்லி + ஒட்ஸ் கலந்து செய்து இருக்கின்றேன்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பால் – 4 கப்
· பார்லி மாவு – 2 தே.கரண்டி
· சக்கரை – 1 கப்
· ஏலக்காய் – 2
· நெய் – 2 மேஜை கரண்டி
கொழுக்கட்டை செய்ய:
· பார்லி மாவு – 1/2 கப்
· ஒட்ஸ் மாவு – 1/2 கப்
· தண்ணீர் – சிறிதளவு
செய்முறை :
v 4 கப் பாலினை 3 கப் பாலாக வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும்.
v பார்லி மாவு + ஒட்ஸ் மாவு + தண்ணீர் சேர்த்து கெட்டியாக சாப்பத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அதனை படத்தில் காணப்படுவது போல உருட்டி கொள்ளவும்.

v உருட்டி வைத்துள்ள மாவினை இட்லி பானையில் வைத்து ஆவில் வைத்து வேகவைத்து கொள்ளவும்.

v 2 தே.கரண்டி பார்லியினை சிறிது பாலில் கரைத்து, கொதித்து கொண்டு இருக்கும் பாலில் சேர்க்கவும்.( இப்படி செய்வதால் பால் மிகவும் திக்காக இருக்கும்.)
v கடைசியில் வேகவைத்த கொழுக்கட்டை + சக்கரை + ஏலக்காய் + நெய் சேர்த்து மேலும் 5 – 6 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.

v சுவையான சத்தான பார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை ரெடி.

குறிப்பு :
· ஒரிஜினல் பால் கொழுக்கட்டை என்றால் இந்த வடிவில் தான் இருக்கும்…சிலர் கொழுக்கட்டை என்றவுடன் உருண்டையாக இருக்கும் என்று நினைத்து கொள்வார்கள்.
· இதனை உருட்டுவது நிறைய நேரம் எடுக்கும் என்று நினைப்பவர்கள், முருக்கு அச்சில் இதனை போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து கொண்டு உதிர்த்து கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...