கேழ்வரகு பார்லி அடை - Ragi Barley Adai

மிகவும் எளிதில் செய்ய கூடிய மாலை நேர டிபன்…எங்க அம்மா இதனை முருங்கைகீரை சேர்த்து செய்து கொடுப்பாங்க..மிகவும் சூப்பராக இருக்கும்…அதனை கீரை சேர்க்காமல் , வேகவைத்த பார்லி சேர்த்து செய்து இருக்கின்றேன்…மிகவும் அருமையான சத்தான அடை இது…நன்றி….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கேழ்வரகு மாவு – 2 கப்
·         வேகவைத்த பார்லி – 1 கப்
·         உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
வதக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1
·         பச்சை மிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 4 இலை
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், இதனை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கினால் போதும்.
·         கேழ்வரகு மாவு + வேகவைத்த பார்லி + உப்பு + வதக்கிய பொருட்கள் சேர்த்து நன்றாக சாப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (கவனிக்க : முதலில் தண்ணீர் சேர்க்காமல் மாவினை பிசையவும்…தேவையெனில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவினை பிசையவும்…)
·         மாவினை சிறிய சிறிய அடைகளாக தட்டி கொள்ளவும்.
·         தோசைக்கல்லினை காயவைத்து அடைகளை போட்டு வேகவிடவும்.
·         ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு, அதனை திருப்பி போட்டு மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.
·         சுவையான சத்தான அடை ரெடி…வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது…

குறிப்பு : இந்த அடையில் வேகவைத்த பார்லி சேர்ப்பதால் உடலிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடுகின்றது…அடை பார்க்கவும் சூப்பராக இருக்கும்.

க்ரிட்ஸ் பொங்கல் & அவசர சாம்பார் - Grits Pongal & Sambar


பொங்கல் என்றால் பெரும்பாலும் அனைவருக்கும் விருப்பமான காலை நேர சிற்றுண்டி. எப்பொழுதும் அரிசியினை வைத்து தான் பொங்கல் செய்ய வேண்டுமா என்ன…அரிசி அதிகம் சேர்த்து கொள்வது உடலிற்கு நல்லது அல்ல என்பதால் கோதுமை ரவையில் தான் அடிக்கடி பொங்கல் செய்வேன்…ஒரு மாறுதலுக்காக இன்று செய்த க்ரிட்ஸ் பொங்கல்…அருமையோ அருமை…

அரிசி ரவா பொங்கலிற்கும் இதற்கும் சிறிது கூட வித்தியாசம் தெரியவில்லை…நீங்கள் செய்து பார்த்து உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும். க்ரிட்ஸினை பற்றி மேலும அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         க்ரிட்ஸ்(White Grits) – 2 கப்
·         பாசிப்பருப்பு – 1 கப்
·         உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         நெய் – 2 மேஜை கரண்டி
·         மிளகு – 1 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
·         கருவேப்பில்லை – 4 இலை
·         பச்சை மிளகாய் – 2
·         முந்திரி – சிறிது
·         கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது 1 தே.கரண்டி

செய்முறை :
·         பாசிப்பருப்பினை நன்றாக கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். (பிரஸுர் குக்கரில் வைத்தால் 2 – 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.)
·         க்ரிட்ஸினை கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். க்ரிட்ஸுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இத்துடன் பாசிபருப்பு + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.


·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லியினை தவிர்த்து அனைத்து சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லியும் சேர்த்து நன்றாக கிளறவும்.


·         சுடான சுவையான சத்தான க்ரிட்ஸ் பொங்கல் ரெடி. இதனை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.


அவசர சாம்பார்
எளிதில் செய்ய கூடிய சாம்பார்…அவரவர் விருப்பதற்கு ஏற்றாற் போல காய்களை சேர்த்து கொண்டும் செய்யலாம்…இந்த சாம்பாரில் பாசிப்பருப்பு சேர்ப்பதால் மிகவும் நன்றாக இருக்கும்….நீங்களும் செய்து பாருங்கள்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         துவரம் பருப்பு – 1/4 கப்
·         பாசிப்பருப்பு – 1/4 கப்
·         வெங்காயம் , தக்காளி – 1
·         பச்சை மிளகாய் – 2
·         கொத்தமல்லி - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு , சீரகம், வெந்தயம் – தாளிக்க
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பெருங்காயம் – சிறிதளவு


செய்முறை :
·         துவரம் பருப்பு + பாசிப்பருப்பினை நன்றாக கழுவி வைக்கவும். வெங்காயம் + தக்காளி நடுத்தர அளவில் நறுக்கி வைக்கவும்.
·         பிரஸர் குக்கரில் பருப்பு + வெங்காயம், தக்காளி , பச்சைமிளகாய் + தூள் வகைகள் எல்லாம் சேர்த்து அத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும வரை வேகவிடவும்.
·         பிரஸர் அடங்கியதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அத்துடன் கொத்தமல்லியினை சேர்த்து சுவையான சாம்பாரினை இட்லி, தோசை, பொங்கலுடன் பறிமாற ஈஸியாக இருக்கும்.
குறிப்பு : இதே மாதிரி இந்த சாம்பாரில் காய்களும் சேர்த்து செய்யலாம்…

ஒட்ஸ் ஆனியன் இட்லிபொடி தோசை & கொள்ளு இட்லிபொடி - Oats Onion IdlyPodi Dosai & Kollu/Horsegram IdlyPodiஇந்த தோசை மிகவும் எளிதில் செய்யகூடிய சத்தான தோசை …இதற்கு தனியாக சட்னி செய்ய தேவையில்லை…இதிலேயே இட்லிபொடி, வெங்காயம்  எல்லாம் சேர்த்து இருப்பதால் சுவையாக இருக்கும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 2 கப்
·         வெங்காயம் - 1
·         கொள்ளு பொடி – 2  மேஜை கரண்டி
·         உப்பு , எண்ணெய் – சிறிதளவு

கொள்ளு பொடி செய்ய தேவையான பொருட்கள் :
·         கொள்ளு – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 10
·         பூண்டு – 3 பல் தோலுடன்
·         எள் – 1/4 கப்
·         உப்பு  - 1 தே.கரண்டி
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :
கொள்ளு இட்லிபொடி செய்முறை :
·         கொள்ளு + காய்ந்த மிளகாய் + எள்யினை கடாயில் தனிதனியாக போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
·         மிக்ஸியில் கொள்ளு+ காய்ந்தமிளகாயினை சேர்த்து அரைத்து கொள்ளவும். கடைசியில் எள் + பூண்டு பற்கள் சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
·         பொடியில் உப்பு + பெருங்காயம் சேர்க்கவும். சுவையான சத்தான கொள்ளு இட்லிபொடி ரெடி. (குறிப்பு : இந்த பொடியினை அப்படியே சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.)

ஒட்ஸ் பொடி தோசை செய்முறை :
·         ஒட்ஸினை 1 கப் தண்ணீரில் 2 நிமிடங்கள் ஊறவைத்து அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.இத்துடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது தோசை மாவு ரெடி. வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
·         கல்லினை காயவைத்து, தோசைகள் ஊற்றவும். தோசைகள் மீது உடனே கொள்ளு பொடியினை தூவி அதன் மீது வெங்காயத்தினை தூவி, சிறிது எண்ணெய் விடவும்.
·         ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, தோசையினை திருப்பி போட்டு 1 நிமிடம் வேகவிடவும்.
·         சுவையான சத்தான தோசை ரெடி. இதற்கு சட்னி எதுவும் தேவையில்லை.

குறிப்பு :
இதே மாதிரி நாம் இட்லிபொடியினை போட்டும் தோசை செய்யலாம்.
இட்லிபொடி செய்யும் பொழுது எப்பொழுதும் நாம் கடைசியில் 2 – 3 பூண்டு பல் தோலுடன் சேர்த்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பொடியினை குறைந்தது 1 மாதம் வரை வைத்து கொள்ளலாம். 

பிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice


பச்சை அரிசி அல்லது புழுங்கல் அரிசியினை சாப்பிடுவதினை விட பிரவுன் ரைஸ் சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. பிரவுன் ரைஸினை பற்றி மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 1/2 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·         பிரவுன் ரைஸ் – 1 கப்

புளி குழம்பு செய்ய :
·         புளி – எலுமிச்சை பழம் அளவு
·         தண்ணீர் – 2 கப்
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 3
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பெருங்காயம் - சிறிதளவு
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

புளிசாதம் பொடி செய்ய :
·         தனியா – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 10 - 12
·         கடுகு – 1 தே.கரண்டி
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         கடலை பருப்பு – 1/4 கப்
·         உளுத்தம் பருப்பு – 1/4 கப்
·         உப்பு – 1 தே.கரண்டி
·         பெருங்காயம் – சிறிதளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடலை பருப்பு – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை :
புளி குழம்பு செய்முறை :
·         புளியினை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, 2 கப் புளிதண்ணீரை கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைபருப்பு + காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை தாளிக்கவும்.
·         இத்துடன் புளி தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு + பெருங்காயம் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்பொழுது புளி குழம்பு ரெடி. (குறிப்பு : இதனை 1 மாதம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்…அப்படி நிறைய நாள் வரவேண்டும் என்றால் எண்ணெயினை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.)

புளிசாதம் பொடி செய்முறை :
·         தனியா + காய்ந்த மிளகாய் + கடுகு + வெந்தயம் + கடலைபருப்பு + உளுத்தம் பருப்பு என எல்லா பொருட்களையும் தனி தனியாக கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். (கவனிக்க : ஒவ்வொரு பொருளாக தனி தனியாக தான் வறுக்க வேண்டும்…நேரம் மிச்சம் செய்யலாம் என்று ஒன்றோடு ஒன்று சேர்த்து வறுத்தால் சுவை மாறுபடும்.)
·         அரைத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவிடவும்.
·         மிக்ஸியில் முதலில் தனியா சேர்த்து அரைக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாயினை சேர்த்து அரைக்கவும்.
·         கடைசியில் தனியா மிளகாய் பொடியுடன் கடுகு + வெந்தயம் சேர்த்து அரைத்து பாத்திரத்தில் கொட்டிகொள்ளவும்.
·         மிக்ஸியில் கடலைபருப்பு + உளுத்தம் பருப்பினை கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
·         இந்த பொடியினை தனியா பொடியுடன் சேர்க்கவும். இத்துடன் பெருங்காயம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது பொடி ரெடி. ( குறிப்பு : இந்த பொடியினையும் செய்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் ஆனாலும் கொடாது….)

புளி சாதம் செய்முறை :
·         பிரவுன் ரைஸினை உதிர் உதிராக வேகவைத்து  கொள்ளவும்.
·         தேவையான அளவு குழம்பினை சேர்த்து கிளறவும்.
·         அதன் பிறகு 2 தே.கரண்டி பொடியினை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.
·         கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடலைபருப்பு + கருவேப்பில்லை தாளித்து கடைசியில் சாதத்துடன் சேர்த்து கிளறவும். சுவையான பிரவுன் ரைஸ் புளிசாதம் ரெடி. இதனை வாழைக்காய் வறுவல் அல்லது விரும்பிய வறுவல், சிப்ஸ், அவித்த முட்டை வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு : இது என்னுடைய அம்மாவின் செய்முறை….அம்மா இங்கு வந்து இருந்த பொழுது எனக்காக பிரவுன் ரைஸில் செய்து கொடுத்து… பிரவுன் ரைஸில் நல்லா இருக்குமோ என்று நினைத்தால் …சுவை சூப்பராக இருந்தது…அதனால் எப்பொழுதும் பிரவுன் ரைஸ் மயம் தான்…

இதனை நவராத்தி சமயம் செய்தாங்க…சுமார் 7 – 8 மாதங்களுக்கு பிறகு இப்பொழுது தான் திரும்ப அம்மாவிடம் பொடி செய்முறையினை கேட்டு போஸ்ட் செய்ய நேரம் கிடைத்துள்ளது…நன்றி

கொள்ளு உருண்டை குழம்பு - Kollu / Horsegram Urundai Kulambu
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு  - தாளிக்க

கரைத்து கொள்ள :
·   புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு
·   தண்ணீர் – 4 கப்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

உருண்டைகள் செய்ய :
·         கொள்ளு – 1 கப்
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 1
·         வெங்காயம் – 1 சிறியது
·         உப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
உருண்டைகள் செய்ய :
·      கொள்ளினை குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து அதனை சோம்பு + காய்ந்த மிளகாய் + உப்பு சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
·      வெங்காயத்தினை பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்க்கவும்.
·      சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி அதனை 5 - 6 நிமிடங்கள் வேகவிடவும்.
·      உருண்டைகள் ரெடி. (கவனிக்க : உருண்டைகளை நன்றாக வேகவிடாமல் முக்கால்வாசி வேகவிடவும்..குழம்பிலும் சிறிது வேகவிடவேண்டும் என்பதால் 3/4 வெந்தால் போதும்.) (மாலை நேர ஸ்நாகாகவும் சாப்பிட விரும்பினால் இதனை குறைந்தது 10 நிமிடங்கள் வேகவிடவும். )
உருண்டை குழம்பு செய்ய :
·         வெங்காயம் + தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
·         கரைத்த புளியுடன் தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தாயம் சேர்த்து தாளித்து, வெங்காயம் + கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.
·         வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியினை போட்டு 1 நிமிடம் வதக்கி அதனுடன் புளி கரைசலினை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
·         வேகவைத்த உருண்டைகளை குழம்பில் சேர்க்கவும். (1 உருண்டையினை நன்றாக உதிர்த்து குழம்பில் சேர்த்தால் குழம்பு கொட்டியாக இருக்கும்.)
·         குழம்பினை மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வைக்கவும். சுவையான சத்தான கொள்ளு உருண்டை குழம்பு ரெடி.

குறிப்பு :
கொள்ளு உருண்டைகளை தனியாக வேகவைக்காமல் கொதிக்கும் குழம்பிலேயே போட்டும் வேகவைக்கலாம்…அப்படி செய்யும் குழம்பு கூடுதல் சுவையுடன் இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...