கோதுமை ரவா இட்லி உப்புமா - Wheat Rava Idly Uppuma


கோதுமை ரவையில் உப்புமா செய்வதை விட இந்த கோதுமை ரவை இட்லியில் செய்த உப்புமா சுவையோ சுவை…மிகவும் அருமையாக இருந்து…நீங்களும் செய்து பாருங்களேன்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         உப்பு – 1/2 தே.கரண்டி
தாளிக்க :
·         எண்ணெய் – 2 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 2

செய்முறை :
·         கோதுமை ரவா இட்லியினை உதிர்த்து கொள்ளவும். வெங்காயம் + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கடலைபருப்பு + காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
·         இத்துடன் வெங்காயம் + கருவேப்பில்லை + உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்து வைத்துள்ள இட்லியினை சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் வேகவிடவும்.
·         சுவையான சத்தான இந்த உப்புமா, மாலைநேர சிற்றுண்டியாக இருக்கும்.


குறிப்பு :
இட்லியினை ப்ரிஜில் குறைந்தது 2 – 3 மணி நேரம் வைத்துவிட்ட பின்னர், உதிர்த்தால் ரவை போல் உதிர் உதிரியாக வரும்.

ப்ரிஜில் இட்லியினை வைக்கவில்லையே என்று நினைத்தால்….இதோ இன்னொரு வழி இருக்கின்றது….. இட்லியினை 1/2 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு உதிர்த்தால் அருமையாக உதிர்க்க வரும்.

அரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu


இது எனது மாமியாரின் ஸ்பெஷல் மீன் குழம்புநீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…..
சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சுத்தம் செய்த மீன் – 1/2 கிலோ
·         தக்காளி - 1
கரைத்து கொள்ள :
·         புளி – 1 எலுமிச்சை அளவு
·         தண்ணீர் – 5 – 6 கப்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 2 மேஜை கரண்டி
·         தனியா தூள் – 1 மேஜை கரண்டி
·         உப்பு தேவையான அளவு

அரைத்து கொள்ள :
·         சின்ன வெங்காயம் – 5
·         தேங்காய் – 2 சிறிய துண்டுகள்
கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         தாளிக்கு வடகம் – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். அத்துடன் தூள் வகைகள் + தக்காளி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
·         கடாயில் புளி கரைசலினை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
·         தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். அத்துடன் கடைசியில் வெங்காயத்தினை சேர்த்து ஒன்றுபாதியுமாக அரைக்கவும்.
·         அரைத்த விழுதினை கொதித்து கொண்டு இருக்கும் குழம்பில் ஊற்றி மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
·         பிறகு மீன்கள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
·         தாளிக்க கொடுத்து பொருட்களை தாளித்து குழம்பில் கடைசியாக சேர்க்கவும். சுவையான மீன் குழம்பு ரெடி.

குறிப்பு :
வடகம் விரும்பாதவர்கள், கடுகு + வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.

பஜ்ஜியினை சாப்பிடலாமா!!!!!!! - Bajji

இது எங்க அம்மாவின் ஸ்பெஷல் பஜ்ஜி……இந்த பஜ்ஜி மிகவும் அருமையாக பூஸ்பூஸ் என்று உப்பலாக இருக்கும்…முக்கியமாக எண்ணெயினை அதிகம் குடிக்காது இந்த பஜ்ஜி….நீங்கள் செய்து பாருங்கள்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கடலைமாவு – 1 கப்
·         மைதா மாவு – 1/2 கப்
·         பேக்கிங் பவுடர் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி
·         ரெட் கலர் பவுடர் – சிறிதளவு
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி (விரும்பினால்)
·         விரும்பிய காய்கள் – வெங்காயம், வாழைக்காய், உருளைகிழங்கு
·         எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :
·         கடலைமாவு + மைதா மாவு + பேக்கிங் பவுடர் +உப்பு + ரெட் கலர்பவுடர் + மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
·         இத்துடன் தேவையான அளவு தண்ணீர்(சுமாராக 2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்….) ஊற்றி கட்டிபடாமல் பஜ்ஜி மாவு அளவிற்கு கலக்கவும்.
·         காய்களை எல்லாம் சிறிய துண்டுகளாக மெல்லியதாக வெட்டி வைக்கவும்.
·         எண்ணெயினை காயவைத்து, காய்களை ஒவ்வொன்றாக பஜ்ஜிமாவில் நினைத்து அதனை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
·         சுவையான பஜ்ஜி ரெடி. இதனுடன் தேங்காய் சட்னி அல்லது சாஸ் வைத்து சாப்பிட சுவையான மாலைநேர ஸ்நாக் ரெடி.

செட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய் மசாலா - Chetinad Stuffed Brinjal Masalaசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கத்திரிக்காய் – 1/4 கிலோ
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பூண்டு – 3 பல்
·         புளி கரைசல் – 2 மேஜை கரண்டி
முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         சோம்பு – 1/2 தே.கரண்டி

கத்திரிக்காயில் ஸ்டஃபிங் செய்ய :
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 3
·         கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்கடலை – தலா 1 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் சேர்க்க :
·         கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளி + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக பிளந்து வைக்கவும்.பூண்டினை நசுக்கி கொள்ளவும்.
·         கத்திரிக்காயினை நான்காக பிளந்து வைக்கவும். கடலைபருப்பு + வேர்கடலை + உளுத்தம்பருப்பினை வறுத்து வைக்கவும்.
·         ஸ்டஃபிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இதனை கத்திரிக்காயில் ஸ்டஃப் செய்யவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சோம்பு தாளித்து, நசுக்கிய பூண்டினை போட்டு வதக்கவும்.      அதன்பின்னர், வெங்காயம் + கருவேப்பில்லை +பச்சைமிளகாய் + தக்காளியினை போட்டு வதக்கவும்.
·         இத்துடன் தூள் வகைகள் + புளிகரைசல் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.
·    பிறகு, ஸ்டஃப் செய்த கத்திரிக்காயினை இதில் சேர்த்து தட்டுபோட்டு முடி வேகவிடவும்.
·         அடிக்கடி கிளறிவிடாமல் ஒன்று அல்லது இருமுறை, மசாலாவினை கத்திரிக்காய் உடையாமல் கிளறினால் போதும்.  
·         கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான கத்திரிக்காய் மசாலா ரெடி. இதனை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

குறிப்பு :
இதில் கடலைபருப்பு + உளுத்தம்பருப்பு + வேர்கடலைக்கு பதிலாக கொள்ளுபொடியினை சேர்த்து கொள்ளலாம்.

என் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள் - Kitchen Thirukural

எனக்கு பிடித்த சில கிச்சன் குறள்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்நீங்கள் படிக்க சில இங்கே….(அடுத்த பதிவில் என்ன....... பஜ்ஜி குறிப்பினை போடலாமா...)
                            
பஜ்ஜி இனிது போண்டா இனிதென்பர் தம் வீட்டில்
சொஜ்ஜி சாப்பிடாதவர்.

ஆவியில் வெந்த உணவு நலமாகும் ஆகாதே
ஆயிலில் பொரித்த உணவு.

அன்னை மகளுக்காற்றும் உதவி சமையல்
அறுசுவை கற்று தரல்

செய்தபொழுதிற் பெரிதுவக்கும் அவ்வுணவை
சிறந்ததெனக் கேட்ட தாய்.

சுவையும் மணமும் உடைத்தாயின் சமையல்
பசியும் தீர்க்கும் அது.

காபி என்ப ஏனை டிபன்னென்ப அவ்விரண்டும்
காலை நேரத்தில் தேவைநமக்கு.

அரிசி முதல் மளிகையெல்லாம் வேனும்
அறுசுவை உணவுக்கு தேவை.

சுவை, நிறம், சூடு, சுகம், வாசம் என்றைந்தின்
வகை கொண்டதே உணவு.

சமைத்த தனாலாய பயன் என்கொல் யாரும்
சாப்பிட இல்லை எனில்.                                                            

சிம்பிள் ஸ்பினாச் ஸ்ட்ராபெர்ரி அவகோடா சாலட் - Spinach Strawberry and Avocado Salad


எளிதில் செய்ய கூடிய சாலட்...ஸ்பினாச், ஸ்ட்ராபெர்ரி , ஆரஞ்சு ஜுஸ் மற்றும் அவகோடா இதில் சேர்ப்பதால் நம்முடைய உடலிற்கு தேவைப்படும் பெரும்பாலான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸும் கிடைத்து விடுகின்றது....கண்டிப்பாக நீங்கள் செய்து பாருங்கள்...        

சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஸ்பினாச் கீரை – 4 கப்
·         ஸ்ட்ராபெர்ரி பழம் - 10
·         அவகோடா  - 1
·         ஆரஞ்சு ஜுஸ் – 1/4 கப்
·         ஆலிவ் ஆயில் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – 1/4 தே.கரண்டி
·         மிளகு தூள் – 1/4 தே.கரண்டி(விரும்பினால்)

செய்முறை :
·         ஸ்ட்ராபெர்ரியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அவகோடாவினையும் பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
·         ஆரஞ்சு ஜுஸ் + ஆலிவ் ஆயில் + உப்பு + மிளகுதூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
·         ஸ்பினாச் கீரையின் மேல் ஸ்ட்ராபெர்ரி + அவகோடா சேர்க்கவும். அதன் மேலே கலந்த சாஸினை சேர்க்கவும். சுவையான சத்தான ஸ்வீட் சாலட் ரெடி.

குறிப்பு :
இது மாதிரி பழங்கள் அதிகமாக சேர்க்கும் சாலட்டில் , பழங்களின் கலர் மாறாமல் இருக்கு (அதாவது, அவகோடா, ஆப்பிள், போன்ற பொருட்கள் சேர்க்கும் சாலடில்) எலுமிச்சை சாறு சேர்ப்பதினை விட ஆரஞ்சு ஜுஸ் சேர்த்தால் கலரும் மாறாது…அதிகம் புளிப்பு சுவையுடம் இல்லாமல் ,சுவையும் கூடுதலாக இருக்கும்…

சிம்பிள் ஒட்ஸ் கட்லட் - Simple Oats Cutlets

நேற்று பதிவில் “கினோவா சாலட்”யில் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன்…அதாவது நமக்கு எப்பொழுதும் அப்படியே Refining பண்ணாமல் “Whole”ஆக கிடைக்க கூடிய பொருள் ஒன்று கினோவா…மற்றொன்று என்ன?????அது தாங்க “ஒட்ஸ்”……..அதனால ஒட்ஸினை சாப்பிடுங்க சாப்பிடுங்க சாப்பிட்டு கொண்டே இருங்க…உடலிற்கு நல்லது தானே….

அந்த கேள்விக்கு Guess செய்த திரு.நட்புடன் ஜமால் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றிகள்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 2 கப்
·         வேகவைத்த பாசிப்பருப்பு – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 1
·         உப்பு, எண்ணெய் – தேவைக்கு

தாளித்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         விரும்பிய காய்கள் – காரட்,பீன்ஸ் ,கோஸ் – பொடியாக நறுக்கியது 1 கப்
·         பச்சை மிளகாய் – 2

செய்முறை :
·         வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி கொண்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,அத்துடன் நறுக்கிய பொருட்கள் + காய்கள் சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வதக்கவும்.
·         ஒட்ஸ் + காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
·         பொடித்த பொருள் + தாளித்த பொருட்கள் + பாசிப்பருப்பு + உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
·         இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லட் போல சுடவும்.
·         ஒருபுறம் கட்லட் நன்றாக சிவந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.
·         சுவையான சத்தான ஒட்ஸ் கட்லட் ரெடி. இதனை சாஸ் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதில் பாசிப்பருப்புக்கு பதிலாக வேகவைத்த உருளைகிழங்கினையும் சேர்த்து செய்யலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...