பார்லி இனிப்பு கொழுக்கட்டை - Barley Sweet Kozhukattaiஎளிதில் செய்ய கூடிய சத்தான கொழுக்கட்டை…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம்- Cooking Time : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பார்லி மாவு – 1 கப்
·         வெல்லம் – 1/4 கப்
·         தேங்காய் துறுவல் – 2 – 3 மேஜை கரண்டி
·         ஏலக்காய் – 1 (பொடித்தது)
·         இஞ்சி – சிறிய துண்டு (விரும்பினால்)
·         நெய் – 1 மேஜை கரண்டி


செய்முறை :
·         வெல்லம் + 1 கப் தண்ணீர் + இஞ்சி சேர்த்து கொதிக்கவிடவும்.


·         வெல்லம் நன்றாக கொதித்தவுடன், தண்ணீரினை வடிக்கட்டி கொள்ளவும். (இப்படி செய்து கொள்வதால் மண், தூசி போன்றவை எல்லாம் வடிகட்டி கொள்ளலாம்.)


·         பார்லி மாவு + தேங்காய் துறுவல் + ஏலக்காய் + நெய் + வெல்லம் தண்ணீர் சேர்த்து மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
·         மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.


·         இட்லி வேகவைப்பது போல கொழுக்கட்டைகளை ஆவியில் சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும்.·         சுவையான சத்தான பார்லி கொழுக்கட்டை ரெடி.


கவனிக்க:
பார்லி மாவு + அரிசி மாவு இரண்டும் கலந்தும் செய்யலாம். நன்றாக இருக்கும்.

Fresh தேங்காய் துறுவல் பயன்படுத்தினால் தான் நன்றாக இருக்கும்.

மாவு பிசையும் பொழுதே நெய் சேர்ப்பதால் சுவையான மணமாக இருக்கும்.

ப்ரான் பிரியாணி - Prawn Biryaniசமைக்க தேவைப்படும் நேரம் – Cooking Time : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ப்ரான் – 20 - 25 (சுமார் 1/4 கிலோ)
·         இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·         அரிசி – 2 கப்
·         தயிர் – 1 கப்
·         எண்ணெய் – சிறிதளவு
·         நெய் – 1 மேஜைகரண்டி

வெட்டி கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 2    
·         புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
·         பச்சைமிளகாய் – 2

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

அரிசி வேகவைக்கும் பொழுது சேர்க்க வேண்டியை :
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         பட்டை- 1
·         கிராம்பு – 2
·         ஏலக்காய்- 2 . பிரியாணி இலை
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         இறாலினை சுத்தம் செய்து அத்துடன் 1/4 கப் தயிர் + 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது + மஞ்சள் தூள்+ 1/2 தே.கரண்டி மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


·         வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியினை சுமார் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி இறாலினை போட்டு முக்கால் பாகம் வேகும் வரை வதக்கவும். ( கவனிக்க: அகலமான கடாயில் செய்தால் நல்லது. அகலம் குறைவாக இருந்தால் இறாலில் இருந்து தண்ணீர் நிறைய வந்து சுவை மாறிவிடும்.)


·         2 – 3 நிமிடங்களில் இறால் வெந்துவிடும். அதனை தனியாக தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.


·         அதே கடாயில் வெங்காயம் போட்டு வதக்கவும்.


·         அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது + தக்காளி & பச்சைமிளகாய் + தயிர் + சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் + புதினா, கொத்தமல்லி என ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


·         ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக் கொதிக்க ஆரம்பித்தவுடன், அரிசி வேகவைக்க கொடுத்துள்ள பொருட்கள் + ஊறவைத்த அரிசியினை சேர்த்து 90% வேகவைத்து கொண்டு சாதத்தினை தண்ணீர் இல்லாமல் வடிகட்டியினால் வடித்து கொள்ளவும்.


·         க்ரேவியில் இறாலினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இதன் மீது 90% வேகவைத்து வடித்து வைத்துள்ள சாதத்தினை பரவிட்டு தட்டு போட்டு மூடி சிறிய தீயில் 8 -  10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         தட்டினை உடனே திறக்காமல், 10 நிமிடங்கள் கழித்து திறந்து, பிரியாணியை கிளறிவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி. இதனை க்ரேவி, தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க:
இறாலினை நிறைய நேரம் வேகவிடவேண்டாம். முதலிலேயே வதக்கி கொள்வது நல்லது.

பிரியாணிக்கு சிறிய இறாலினை விட பெரிய இறால் தான் நன்றக இருக்கும்.


கோதுமை ஜீரா - Godhumai Jira - Wheat Flour Halwaஅம்மா எப்பொழுதும் கோதுமைமாவில் அல்வா செய்வாங்க…ரொம்ப நல்லா இருக்கும்…அதே மாதிரி கோதுமைமாவில், சிறிது மாறுதலுடன் ரொம்பவும் சுலபமாக கை வலிக்காமல் செய்த கோதுமை ஜீரா ஸ்வீட் இது….

இந்த ஸ்வீட்டிற்கு எந்த வித கலரும் சேர்க்க தேவையில்லை. கோதுமை மாவினை நன்றாக வறுத்தாலே போதும்.

எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் இது…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி பாரதி.

சமைக்க தேவைப்படும் நேரம்- Cooking Time : 8 - 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கோதுமை மாவு – 1/2 கப்
·         சக்கரை – 3/4 கப்
·         தண்ணீர் – 1 & 1/2 கப்
·         நெய் – 1/2 கப்

செய்முறை :
·         கடாயினை சூடுபடுத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அத்துடன் கோதுமை மாவு சேர்க்கவும்.


·         கோதுமை மாவினை கட்டியில்லாமல் அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும்.
·         சுமார் 2 – 3 நிமிடங்களில் கோதுமை மாவு கலர் மாறி நன்றாக வாசம் வரும்.


·         தண்ணீரினை சூடுபடுத்து கொள்ளவும். (மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் வைத்தால் போதும்).கொதிக்கவிட வேண்டாம்.

·         கோதுமை மாவு கலவையுடன், சக்கரை + சூடுதண்ணீர் சேர்த்து உடனே கிளறவும். (கவனிக்க: சூடுதண்ணீர் சேர்த்தவுடன் பெரிய பெரிய Bubbles மாதிரி வரும். அதனால் பெரிய பாத்திரத்தில் செய்வது நல்லது.)
·         கலவையினை மேலும் 2- 3 நிமிடம் கிளறவும். (கைவிடாமல் கிளற வேண்டும் என்று இல்லை…அடிக்கடி கிளறினால் போதும்.)


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் ரெடி.


குறிப்பு :
நெயிற்கு பதிலாக பாதி நெய் + பாதி எண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

1 பங்கு கோதுமை மாவு என்றால் அதே பங்கு நெய் (அ) எண்ணெய் சேர்த்தால் தான் கலர் வரும். நெய் குறைவாக சேர்த்தால் சுவை மற்றும் நிறத்தில் மாறுப்படும். (கண்டிப்பாக இந்த கலர் வாரது…வெள்ளை நிறத்திலேயே இருக்கும்.)

கண்டிப்பாக சூடுதண்ணீர் பயன்படுத்தவும். 1 பங்கு கோதுமை மாவிற்கு 2 & 1/2 பங்கு தண்ணீர் என்ற கணக்கில் சேர்த்து கொள்ளவும்.

சக்கரையினை பொடித்து சேர்க்க தேவையில்லை. அப்படியெ சேர்த்து கொள்ளலாம். கொடுத்துள்ள அளவின் படி பொருட்களை சேர்த்தால் கண்டிப்பாக நல்லா இருக்கும் இந்த ஸ்வீட்.

சூடான தண்ணீர் சேர்த்தவுடன், பொங்கிவருவது போல இருக்கும். ஆனால் கிளறிவிட்டால் தண்ணீர் எல்லாம் காணாமல் போய்விடும்.


ரவா இட்லி & உருளைகிழங்கு கொஸ்து - Rava Idly & Potato Kosthu - Urulai Kosthuஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் - Cooking Time : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ரவை – 3 கப்
·         உளுத்தம்பருப்பு – 1 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு


செய்முறை :
·         உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த பொருட்களுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         அரைத்த மாவு + ரவை + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.


·         மாவினை குறைந்தது 4 - 5 மணி நேரம் புளிக்கவிடவும்.


·         மாவு புளித்தவுடன், இட்லியினை சுடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ரவா இட்லி ரெடி. இதனை சாம்பார், சட்னி, குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க:
·         ரவையினை முதலிலேயே ஊறவைக்க தேவையில்லை. அப்படியே அரைத்த உளுத்தமாவில் கலந்து கொண்டால் போதும்.

·         இட்லி மாவு பதத்திற்கு மாவு கரைக்கும் பொழுது ,தண்ணீரின் அளவினை சிறிது அதிகமாக(சுமார் 1/2 கப்) சேர்த்து கொள்ளவும். (ரவை தண்ணீரினை எல்லாம் இழுத்து கொள்ளும்.)

·         Grinderயில் உளுத்தம்பருப்பு அரைப்பது என்றால், 4 கப் ரவையினை சேர்த்து கொள்ளவும்.

உருளைகிழங்கு கொஸ்து


சமைக்க தேவைப்படும் நேரம் – Cooking Time : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         உருளைகிழங்கு – 1
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 2
·         பச்சை மிளகாய் – 2
·         பூண்டு – 4 பல்
·         இட்லி மாவு – 1 குழிக்கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க

கடைசியில் சேர்க்க :
·         கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளி + உருளைகிழங்கினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பினை தாளித்து பூண்டினை சேர்த்து வதக்கவும்.

·         பூண்டு வதங்கியவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் உருளைகிழங்கினை போட்டு 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

·         உருளைகிழங்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய் + தக்காளி + தூள் வகைகளினை சேர்த்து வதக்கவும்.

·         இதனை அப்படியெ சுமார் 4 நிமிடங்கள் தட்டு போட்டு வேகவிட்டு, கரண்டியால் நன்றாக மசித்து கொள்ளவும்.

·         அதன் பிறகு 2 – 3 கப் தண்ணீர் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும். (குறிப்பு : தக்காளி புளிப்பாக இல்லை என்றால் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையாக இருக்கும்.)

·         கடைசியில் இட்லிமாவினை இதில் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு மேலும் 2  - 3 நிமிடங்கள் வேகவிட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய உருளைகிழங்கு கொஸ்து ரெடி.


கவனிக்க:
இட்லி மாவு என்று குறிப்பிட்டு இருப்பது, அரிசி + உளுந்து கொண்டு அரைத்த இட்லி மாவு.

இட்லி மாவிற்கு பதிலாக வெரும் அரிசிமாவினை சிறிது தண்ணீரில் கலந்து கொண்டு குழம்பில் ஊற்றினால் நன்றாக இருக்கும்.

இதனை பிரஸர் குக்கரில் செய்யலாம். பிரஸர் குக்கரில் செய்வது என்றால், இட்லி மாவு சேர்க்க வேண்டாம்.

தந்தூரி சிக்கன் - Tandoori Chicken
சமைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 2 – 3 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/2 கிலோ

சேர்க்க வேண்டிய பொருட்கள் 1 :
         எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய பொருட்கள் 2 :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         ஒமம் – 1 தே.கரண்டி (பொடித்தது)
·         கடலைமாவு – 3 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய பொருட்கள் 3 :
·         தயிர் – 1 கப்
·         இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         கரம்மசாலா – 1/2 தே.கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
·         கடுகு – 1/2 தே.கரண்டி (பொடித்தது)
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து கொண்டு இரண்டு முன்று இடங்களில் கத்தியினால் கீறி கொள்ளவும்.

சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 1 யினை சிக்கன் மீது தடவி அதனை சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவிடவும்.


சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 2 : ஒமம் மற்றும் கடுகினை தனிதனியாக வறுத்து கொண்டு தனி தனியாக பொடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி ஒமம் பொடியினை போட்டு தாளித்து அத்துடன் கடலைமாவினை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.


சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 3 யினை எல்லாம் கலந்து கொள்ளவும். அத்துடன் கடலைமாவு கலவையினை சேர்த்து கலந்து கொள்ளவும்.


இந்த கலவையினை சிக்கன் மீது தடவி கொண்டு குறைந்தது 2 – 3 மணி நேரம் ப்ரிஜில் வைத்து ஊறவைக்கவும்.


அவனை 400 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும்.சிக்கன் அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.


அவனில் 400Fயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும். சிக்கனை வெளியில் எடுத்து அதன் மீது சிறிது எண்ணெய்  spray செய்து திரும்பவும் 400F Broil Modeயில் 15 - 20 நிமிடங்கள் வேகவிடவும்.


சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.

கவனிக்க:
சிக்கனை குறைந்தது 2 – 3 மணி நேரமாவது ஊறவைத்தால் தான் நன்றாக இருக்கும்.

சிறிது ரெட் கலர் சேர்த்து கொண்டால் சிக்கன் நன்றாக கலராக இருக்கும்.

தயிர் மிகவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.Related Posts Plugin for WordPress, Blogger...