கூட்டாஞ்சோறு - கிராமத்து சமையல் - Kootanchoru Recipe - Gramathu Samayal Recipes


print this page PRINT
இதில் நிறைய காய்கள் சேர்ப்பதால் மிகவும் சுவையான சத்தான கலந்த சாதம் இது.

பொதுவாக இதற்கு கத்திரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், சுரைக்காய், பூசணிக்காய், கொத்தவரங்காய், உருளைகிழங்கு, புடலை, செள செள , அவரைக்காய் , மாங்காய் போன்ற நாட்டு காய்கள் தான் சேர்த்து செய்வாங்க...

அனைத்து காய்களிலும் 1 கைபிடி அளவு எடுத்து கொண்டால் சரியாக இருக்கும். அவரவர் விரும்பிய காய்கள் அனைத்தும் சேர்க்கலாம்.

அதே மாதிரி இதில் முருங்கைக்கீரை சேர்ப்பாங்க...முருங்கைக்கீரைக்கு பதிலாக விரும்பினால் வெந்தயக்கீரை/ Methi Leaves , Water Cress, Collard Greens , Spinach என்று சேர்த்து கொள்ளலாம்.

இதில் காரத்திற்கு தனியாக எந்த தூள் வகையினையும் சேர்க்கவில்லை. அதனால் தேவையான அளவு காரத்திற்கு காய்ந்த மிளகாயினை அரைத்து கொள்ளவும்.

மாங்காய் சேர்ப்பதாக இருந்தால் புளியின் அளவினை சிறிது குறைத்து கொள்ளவும்.

முதலில் அரிசியினை பருப்புடன் வேகவைத்து கொண்டால் எளிதில் செய்து கொள்ளலாம்.

 கடைசியில் தாளித்த பொருட்கள் சேர்த்த பிறகு சாதம் கொஞ்சம் தளர்வாக இருந்தால் சாதம் ஆறினால் சரியான பதத்தில் இருக்கும். இல்லை என்றால் சாதம் ஆறிய பிறகு கெட்டியாகிவிடும்.

அப்படி கெட்டியாகிவிட்டால், சூடான தண்ணீர் சேர்த்து ஒரு முறை கிளறி பறிமாறவும்.

இதில் நான் வடகம் போட்டு தாளித்து இருக்கின்றேன்.வடகம் இல்லை என்றால் வெரும் கடுகு + வெந்தயம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

காய்கள் வெட்டி வைத்துவிட்டால் எளிதில் செய்யது விடலாம். நீங்கள் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  அரிசி - 2 கப்
   .  துவரம் பருப்பு - 1 கப்
   .  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

   .  கீரை - 1 கப் (சுத்தம் செய்தது)
   .  காய்கள் - அனைத்தும் சேர்த்து 3 - 4 கப்

(கத்திரிக்காய், சுரைக்காய், வாழைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய்,உருளைக்கிழங்கு, பீன்ஸ், காரட், செள செள , மாங்காய்)

அரைத்து கொள்ள :
   .  சின்ன வெங்காயம் - 10
   .  காய்ந்த மிளகாய் - 8 - 10 (காரத்திற்கு ஏற்ப)
   .  தேங்காய் - 2 பெரிய துண்டுகள்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
   .  மஞ்சள் தூள் - 3/4  தே.கரண்டி
   .  உப்பு - தேவையான அளவு
   .  பெருங்காயம் - 1/4 தே.கரண்டி

கடைசியில் தாளித்து சேர்க்க :
   .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
   .  வடகம் - தாளிக்க சிறிதளவு
   .  சின்ன வெங்காயம் - 1 கப்
   .  கருவேப்பிலை - 10 - 15 இலை

செய்முறை :
.  அவரவர் விருப்பதிற்கு ஏற்ப காய்கள் எடுத்து வைத்து கொள்ளவும். கண்டிப்பாக 3 - 4 விதமான காய்கள் எடுத்து வைக்கவும். அப்பொழுது தான் மிகவும் சுவையாக இருக்கும்.

.  காய்களை நன்றாக கழுவி கொள்ளவும். அனைத்து காய்களையும் ஒரே அளவில் வெட்டி வைக்கவும். (இப்படி செய்வதால் அனைத்தும் ஒரே நேரம் வேகும். )


.  மாங்காயினை மட்டும் பெரிய துண்டுகளாக வெட்டவும். கீரையினை சுத்தம் செய்து மண் இல்லாமல் அலசி வைக்கவும்.

(இதில் பெரும்பாலும் முருங்கைக்கீரை தான் சேர்த்து செய்வாங்க. நான் அதற்கு பதில் வெந்தயக்கீரை / Methi Leavesயினை பயன்படுத்தி இருக்கின்றேன். )

.  அரிசி + பருப்பினை கழுவி கொள்ளவும். அத்துடன்  6 கப் தண்ணீர் சேர்த்து 2 - 3 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.


.  சாதம் வேகும் நேரத்தில், வேறு ஒரு அடுப்பில் கடாயினை வைத்து காய்ந்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள காய்களை + 1/4 கப் தண்ணீர் மட்டும் சேர்த்து 3 - 5 நிமிடங்கள் தட்டு போட்டு மூடி வேகவிடவும். (மாங்காய் + கீரையினை இப்பொழுது சேர்க்க வேண்டாம். )


.  அரைக்க கொடுத்துள்ள சின்ன வெங்காயம் + தேங்காய் + காய்ந்த மிளகாயினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வைக்கவும். 


.  புளியினை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். புளி கரைசலுடன் அரைத்த பொருட்களை சேர்த்து கலந்து வைக்கவும்.


.  இப்பொழுது காய்களுடன் இந்த புளி கரைசலினை சேர்க்கவும்.

.  அத்துடன் மாங்காய் துண்டுகள் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக 3 - 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும். (மாங்காய் சேர்க்கவில்லை என்றால் புளியின அளவினை கொஞ்சம் அதிகம் எடுத்து கொள்ளவும்.)


.  நன்றாக கொதிக்கும் பொழுது கீரையினை சேர்த்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வேகவிடவும்.

.  இப்பொழுது பிரஸர் குக்கரினை திறந்து 1 - 2 முறை கலந்து கொள்ளவும். அத்துடன் இந்த காய் கலவையினை சேர்த்து நன்றாக கிளறி தட்டு போட்டு மூடி குறைந்த தீயில் 3 - 5 நிமிடங்கள் வேகவிடவும்.


.  தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் தாளித்து அத்துடன் சின்ன வெங்காயம் + கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

.  இதனை சாதத்துடன் சேர்த்து கிளறிவிடவும்.


.  சுவையான சத்தான கூட்டாஞ்சோறு ரெடி. இதனை அப்பளம், ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


5 comments:

சுபத்ரா said...

Looks delicious :)

Sangeetha Nambi said...

its tempting !

ADHI VENKAT said...

பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது..

Kalpana Sareesh said...

naatu kaikari saadham sooperr

Ramkumar said...

கூட்டஞ்சோறு கேள்விப்பட்டு இருக்கின்றேன். உங்கள் செய்முறையை பார்க்கும்பொழுதுதான் செய்து சாப்பிட்டு பார்க்கவேண்டும் என்று தோன்றுகின்றது. மிக்க நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...